* ஆதரவாக 21 வாக்குகள் * எதிராக 15 வாக்குகள்
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து வாக்களிப்பு
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து வாக்களிப்பு
தென், சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளில் இன்று வாக்கெடுப்பு
திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை நேற்று முழுமையான அங்கீகாரம் வழங்கியது. இந்த சட்ட மூலம் 6 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
திவிநெகும சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சபை நேற்று சபை தவிசாளர் ஆரியவத்தி கலப்பத்தியின் தலைமையில் கூடியது.
முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார். காலை 9.30 முதல் பிற்பகல் 4.00 மணிவரை திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆளும் தரப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சட்ட மூலத்திற்கு ஆதரவாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க. உறுப்பினர்கள் எதிராகவும் கருத்துத் தெரிவித்தனர். விவாத முடிவில் சட்ட மூலம் தொடர்பில்
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் ஐ.தே.க. குழுத் தலைவர் தயா கமகே ஆகியோர் கோரினர். இதன் பிரகாரம் வாக்கெடுப்பு இடம் பெற்றதோடு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரும் ஆளும் தரப்புடன் இணைந்து சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன்படி திவிநெகும சட்ட மூலம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்ற ப்பட்டது. திவிநெகும சட்ட மூலம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது. ஆனால் இதற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறி வித்திருந்தது.
இதன்படி மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்கள் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. தென், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங் களில் இன்று (3) இது தொடர்பான விவாதம் நடைபெறுகிறது.
திவிநெகும சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் இந்த சட்ட மூலத்திற்கு சகலரும் கட்சி பேதமின்றி ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரினார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத் தியது குறித்து மாகாண சபை சார்பில் நன்றி தெரிவித்த அவர் ஐ.தே.க. ஆட்சியில் தனது தந்தை புலிகளினால் கொல்லப்பட்ட அவலத்தையும் நினைவு கூர்ந்தார்.
இந்த விவாதத்தில் கருத்துத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஜெமீல் இந்த சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங் கிரஸ் ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
இந்த சட்ட மூலம் குறித்து மு.கா. விரிவாக ஆராய்ந்ததாக கூறிய அவர் கிழக்கில் அரசுக்கு ஆதரவு வழங்கியது போன்று இதற்கும் ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டார். இந்த சட்ட மூலத்தினூடாக சமுர்த்தி உத்தி யோகத்தர்கள் மட்டுமன்றி சமுர்த்தி பய னாளர்களும் நன்மையடைவர் எனவும் அவர் கூறினார்.
மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தனதுரையில் இந்த சட்ட மூலத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதியின் தலைமையில் நாடு சுபீட்சமடைந்து வருவது குறித்து பாராட்டுத் தெரிவித்த அவர் முன்னாள் முதலமைச்சரின் தலைமையில் கிழக்கு மாகாணம் சிறப்பாக கட்டி எழுப்பப் பட்டதாக குறிப்பிட்டார்.
மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றுகையில், எதிர்க் கட்சிகள் கூறுவது போன்று திவிநெகும சட்டமூலமொன்றும் பெரும் பிரச்சினைக் குரிய சட்ட மூலமல்ல எனவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வும் இதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட வுள்ளதாகவும் கூறினார்.